Ad Widget

விடுதலைப் புலிகளின் சொத்துக்களை கொடுப்பார்களா? சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கபோகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை ஊடகங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளாமல், சிங்கள மக்கள் மத்தியில் எம்மை குறித்தும், ஒட்டுமொத்தமாக வடமாகாணசபை குறித்தும் தவறான எண்ணங்களை விதைக்கும் வகையில் அபாண்டமான பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலை புலிகள் போர் காலத்தில் கைவிட்டு சென்ற பொருட்களை வடமாகாண சபையிடம் ஒப்படைக்ககோரி வடமாகாணசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அவ்வாறான கருத்தை நான் கூறவில்லை. அவ்வாறான செய்தி தொடர்பாக அந்த ஊடகங்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. இந்நிலையில் நாம் வழங்கிய மறுப்பையும் அவர்கள் நிராகரித்துள்ளார்கள். இது திட்டமிட்டு சிங்கள மக்கள் மத்தியில் எங்கள் தொடர்பான தவறான எண்ணத்தை வளர்க்கும் நோக்கில் சிங்கள ஊடகங்கள் செயற்படுவதை காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை ஆள்.. ஆளுக்கு கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது என்ன இருக்கிறது. மேலும் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கபோகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா? இவ்வாறான நிலையில் ஊடகங்கள் பொய்யை எழுதிக் கொண்டிருக்கின்றன.

மேலும் முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நடைபெற்ற இடத்தில் காணப்படும் போரின் எச்சங்களை சேகரித்து அடுத்த தலைமுறைக்கு காட்டவேண்டும் என்றே நாங்கள் பேசியிருந்தோம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Posts