நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் வெற்றிப்பெற்றும் எமது அரசியல் செயற்பாடுகளில் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் காணப்படுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
“முன்னாள் போராளிகளாகிய நாம் கடந்த காலமாக எமது உரிமைகளுக்கான போராடி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டு ஒரு செல்லாக்காசாக வாழ்ந்து வந்தோம்.
இதனால் எமது போராளிகளுக்கு ஓர் அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் கடந்த உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னமான தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து எழுத்துமூலமான உடன்படிக்கைகளுடன் திருகோணமலை மாவட்ட சார்பில் மூதூர் மற்றும் வெருகல் பிரதேச சபையில் போட்டியிட்டோம்.
அதன்போது நாம் இணைந்து போட்டியிடும் உதயசூரியன் சின்னமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் ஆகியோர் எமக்கு உறுதிமொழி வழங்கியிருந்தனர்.
முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் வெற்றிபெறும் பகுதிகளிலும் தேசிய பட்டியல் ரீதியில் உறுப்புரிமை வழங்கப்படுமென ஆனால் எமது கட்சியின் சார்பில் போட்டியிட்டு சம்பூர், வெருகல் மற்றும் முகத்துவாரம் ஆகிய இரு பகுதிகளில் விகிதாசாரம் மூலமாக வெற்றிபெற்ற எமது உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை வழங்காமல் வேறு நபர்களுக்கு தேசியப்பட்டியல் ரீதியில் உறுப்புரிமை வழங்கியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தொலைபேசி மூலமாக நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சரியான பதிலை வழங்காமல் தொடர்பை துண்டித்து விட்டனர்.
ஆகையால் மக்களது ஆதரவுடன் 548 வாக்குகள் பெற்றுக் கொண்ட நாம் எதற்காக ஈபிஆர்எல்எப் கட்சியுடன் இணைந்து செற்படவேண்டும்.
அத்துடன் எமது அரசியல் கட்சி தொடர்பான செயற்பாடுகளில் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல் மிகவும் கூடுதலாக அதிகரித்துள்ளது. புதிதாக கட்சியுடன் இணைந்து செயற்படுபவர்களை அவர்கள் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துகின்றனர்.
மேலும் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு தகுந்த முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
இதனால் போலியான அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.