Ad Widget

விடயத்தை தெரிந்து வைத்திருந்தே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது- சஜித்

நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் எனத் தெரிந்தே வேலையற்ற பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன என்றும் அரசாங்கம் வாக்குறுதியளித்த காலத்துக்குள் நியமனம் வழங்கியிருந்தால் தேர்தல் ஆணையாளர் இடைநிறுத்தியிருக்கமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “ஆட்சியமைத்து ஒரு மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் உள்வாங்கி, 3 மாதங்களுக்குள் நிரந்தர நியமனம் வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின்போது நான் வாக்குறுதியளித்திருந்தேன்.

ஆனால் எனது எதிர்வாதி, பட்டதாரிகளை ஒருமாதத்துக்குள் இணைத்துக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். ஜனவரியில் நியமனம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெப்ரவரியில் வழங்குவதாக தெரிவித்தனர்.

இறுதியில் நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சிலருக்கு அவசரமாக நியமனக் கடிதங்களை தபாலில் அனுப்பியிருக்கின்றது.

மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நியமனங்கள் வழங்குவது, இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும். அதனடிப்படையிலே பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவதை தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் இடைநிறுத்தி இருக்கின்றார்.

அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதியை அரசாங்கம் ஏற்கனவே அறிந்திருந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நியமனம் வழங்குவதை தேர்தல்கள் ஆணையாளர் இடைநிறுத்துவார் எனத் தெரிந்துகொண்டே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் 44ஆயிரம் பட்டதாரிகளையும் ஏமாற்றி இருக்கின்றது.

அத்துடன் பட்டதாரிகளுக்கான நியமனத்தை இடைநிறுத்த நானே செயற்பட்டதாக அரசாங்கம் பொய்ப் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts