Ad Widget

விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிலைக்கு கீழிறங்க தமிழ் தேசிய முன்னணி தயாரில்லை!

“முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராக இல்லை. தேர்தல் கூட்டணி அமைப்பதற்காகவோ அல்லது எவருடைய எதிர்பார்ப்புக்காகவோ நாம் எமது கொள்கையிலிருந்து இறங்கமாட்டோம்”இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

“எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது பிழையாகாது.

அதனால்தான் ஐங்கரநேசனின் கூட்டங்களில் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அனந்தியின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன். கஜேந்திரகுமார் சற்று இறங்கி வந்தால் அவரின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன்” என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றைய ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஈபிஆர்எல்எப் மாநாட்டில் தான் பங்கேற்றது சரியானது எனக் குறிப்பிட்டு வெளியிட்ட அந்த ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார்.

அதுதொடர்பில் எழுப்பிய கேள்விக்கே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

“நீதியரசர் விக்னேஸ்வரன் மீது எமக்கு தனி மரியாதை உண்டு. அவர் கொள்கையில் உறுதியாக உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் சற்று இறங்கிச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ அதன் தலைவரோ தயாராகவில்லை.

எமது நிலைப்பாட்டை நன்கு அறிந்த அவர் இவ்வாறான கருத்தை ஏன் முன்வைத்தார் என்பது தெரியவில்லை. தேர்தல் கூட்டணி ஒன்றுக்காக நாம் எமது கொள்கையிலிருந்து சற்றும் கீழிறங்கத் தயாரில்லை” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

Related Posts