Ad Widget

விக்னேஸ்வரனை அவதானிக்கிறேன்! அவரின் செயல்களை ஏற்க முடியாது என்கிறார் சம்பந்தன்!!

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றேன்.”- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை இணைத்து வருகின்றார்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை சிதைக்கக் கூடாது. அடாவடித்தனமான – இறுக்கமான நிலைப்பாடுகள் உதவப்போவதில்லை. கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டுக்குக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பாழடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன் கட்சியின் கொள்கைகளுக்குக் கட்டுப்படவேண்டியவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்றன. அந்தக் கொள்கைகளே கட்சியினால் அனைத்துத் தேர்தல்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகளின் அடிப்படையிலேயே விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டார், முதலமைச்சரானார்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும், துரதிஷ்டசமாக விக்னேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்தக் கொள்கைகளுடன் தன்னை அடையாளம் கண்டுள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதனைக் கண்காணித்து வருகின்றோம்” – என்று கூறியுள்ளார் சம்பந்தன்.

Related Posts