Ad Widget

விக்னேஸ்வரனின் இரட்டை வேடம்! சி.தவராசா

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை குறித்த தீர்மானம் பற்றி, வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கருத்து வௌியிட்டுள்ளார்.

thavarasa-epdp

அவர் கூறியுள்ளதாவது,

இலங்கை அரசின் இனப் படுகொலை தொடர்பாக அண்மையில் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜனாதிபதி சிறிசேனவிற்கோ அல்லது அவரின் அரசிற்கோ எதிரானதல்ல எனவும் முன்னைய அரசுகளையே, குறிப்பாக ராஜபக்ஷ அரசை, குறி வைத்து கொண்டு வரப்பட்டதாகவும் முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த பன்னிரெண்டாம் திகதி ஜனாதிபதி சிறிசேன அவர்களின் அழைப்பினைத் தொடர்ந்து மேற்படித் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்கும்போது வடமாகாண முதலமைச்சர், ஜனாதிபதியின் கையைப் பிடித்து, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போதைய அரசுக்கு எதிரானதல்ல என்று விளக்கமளித்ததாக ஊடக செய்திகளில் இருந்து அறியக் கிடைக்கிறது.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குறித்த தீர்மானத்தை சபையில் சமர்ப்பித்து, அதற்கு விளக்கமளித்து உரையாற்றும்போது, தற்போதைய அரசு மீதான நம்பிக்கையீனத்தையும், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது, அவர் தமிழ் மக்களின் கோரிக்கைகளை தட்டிக்கழித்ததையும், பிரதமரின் மருமகனான தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வடக்கு மாகாணத்துக்கு வருகைதந்து காணி, இராணுவக் குறைப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களும் தமக்கு பலத்த ஏமாற்றத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியதாகவும், இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே பொருத்தமான நேரத்தில் இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

தமிழ் ஊடகங்களுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் இவ்வாறு உணர்ச்சி பொங்க உரையாற்றிய முதலமைச்சர், தீர்மானத்தை நிராகரிப்பதாக மத்திய அரசு கூறி, விளக்கம் கேட்ட போது, தீர்மானம் தற்போதைய அரசுக்கு எதிரானதல்ல என்றும் முன்னைய அரசுக்கு எதிரானது என்றும் தனது நிலைப்பாட்டை தானே மறுத்திருப்பதானது தமிழ் மக்களிடம் ஒன்றையும், மத்திய அரசுகளிடம் வேறொன்றையும் கூறி காலங்காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அழிவுப்பாதையில் இழுத்துச் செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நாடகங்களில் ஒன்றாகும்.

மக்களை உசுப்பேற்றி அரசியல் நடத்தும் இவர்கள் மத்திய அரசுடன் தமது சுய தேவைகளுக்காக நெருக்கமான உறவுகளை பாதுகாத்துவருவதையே நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts