Ad Widget

முதலமைச்சர் , ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளும் கட்சியினரே போர்க்கொடி!

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பொருளதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஆளும் கட்சியினரே முதலமைச்சர் விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை சபையில் நுழைய விடாமல் செய்வோம் எனப் போர்க்கொடி தூக்கினர்.

வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வு நேற்று நடந்தது. இதன்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிராமிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் பி.ஹரிசன் பொருளாதார மத்திய நிலையத்துக்கு இன்று (நேற்று) காணி ஒதுக்காது விடின் குறித்த திட்டம் வேறு மாகாணத்துக்கு வழங்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற எப்படியாவது காணி ஒன்றை ஒதுக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி கருத்துக்களை வெளியிட்டனர். இந்தக் கருத்துக்களால் சபையில் பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மேலும், பொருளாதார மத்திய நிலையத்துக்கு காணி ஒன்றை இன்று (நேற்று) ஒதுக்காவிட்டால் முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் சபைக்குள் நுழைய விடாது போராட்டம் நடத்துவோம் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் தொனியில் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து வவுனியாவை சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன் பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணியை ஒதுக்காதுவிடின் தான் வெளிநடப்பு செய்வார் எனக் கூறினார். கூறியதுடன் மட்டுமல்லாமல் பிரச்சினை குறித்த தீர்மானம் சபையில் எடுக்கும் முன்னரே வெளிநடப்பும் செய்து விட்டார்.

பொருளாதார மத்திய நிலையத்துக்கு வவுனியா பஸ் நிலையம் பின்பாக உள்ள காணியை அல்லது தாண்டிக்குளத்தில் விவசாய அமைச்சுக்கு சொந்தமான காணியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. வுவனியா பஸ் நிலையம் பின்பாக உள்ள காணி பொருத்தமற்றது என உறுப்பினர்கள் தெரிவித்தமையால் தாண்டிக்குளத்தில் விவசாய அமைச்சுக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

Related Posts