Ad Widget

விகாரை மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவம்: சுரேஷ்

suresh-peramachchantheranநாவற்குழியில் விகாரை மீதான கைக்குண்டு தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த கைக்குண்டு தாக்குதல் இராணுவ பிரசன்னத்தை நியாப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம் எனவும் இந்த தாக்குதலை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக வேடமிட்டு அரசாங்கமும் அதன் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவற்குழி சிங்கள குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரை மீது கடந்த சனிக்கிழமை இரவு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் நீண்ட காலமாக நிலவி வந்த யுத்தத்திற்கு பின்னர் இடம்பெற்றிருக்கும் நாவற்குழி விகாரை மீதான கைக்குண்டுத் தாக்குதல், இராணுவ பிரசன்னத்தை நியாப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு நாடகமாகும். வெலிவேரியா சம்பவத்தின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இவ்வாறான எதிர்பை திசை திருப்பும் நோக்கிலும் அவற்றை நியாயப்படுத்தவும் நாவற்குழியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விதத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதிவேலையாகவே இதனை நாம் பார்க்கிறோம்.

நாவற்குழி சிங்களக் குடியேற்றத்திட்டம் என்பது அரசாங்க நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு சட்டவிரோதமாக குடியேற்றமாகும். இருந்தும் இந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது தெட்டத்தெளிவான உண்மையாகும்.

அவ்வாறு நடத்தப்பட்டிருந்தாலும் கூட இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் இன்று இராணுவத்தினரிடம் மட்டுமே இருப்பதாக நாம் நம்புகிறோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி

நாவற்குழி புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு

Related Posts