Ad Widget

வாழ்வாதாரத் திட்டங்கள் சேந்தாங்குளம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது

வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த சேந்தாங்குளம் பகுதியில், ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான ஐ.ஓ.எம். நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள், அந்தப் பகுதி மக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டன.

வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு அமைப்புக்களால் பல்வேறுபட்ட நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியில் ஐ.ஓம்.எம். நிறுவனத்தால் சேந்தாங்குளம் பகுதியில் பல்வேறுபட்ட வாழ்வதார உதவித் திட்டங்கள் மக்களுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளன.

சேந்தாங்குளம், கடற்கரை முதலாம் வீதி புனரமைக்கப்பட்டு வலி.வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தனிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் மீனவர்களுக்காக கடல் வாய்க்கால் (வான்தோண்டல்) அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன் ஏல விற்பனை நிலையம், பொதுநோக்கு மண்டபம், நூலகம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், எரிபொருள் நிரப்பு நிலையம், இயந்திரம் திருத்தும் நிலையம் என்பனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வலி.வடக்குப் பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், ஐ.ஓ.எம்.பிரதான திட்டப் பணிப்பாளர் டன்ஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts