“தென்னிந்த திரைப்படங்களின் தூண்டுதலால், கத்தி மற்றும் வாள்களால் வெட்டிக்கொள்ளும் சம்பிரதாயம் யாழ்ப்பாணத்திலும் நடைமுறையில் உள்ளது. இந்த வாள் கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின், சட்டத்தின் ஊடாக ஆகக்கூடிய அதியுச்ச தண்டனையை வழங்கவேண்டும்” என்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்தச் சமூக விரோத செயற்பாடுகள், நீதிமன்றத் தண்டனைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலேயே இடம்பெறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ். மாநகர சபை எல்லைக்குள், இன்றைக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், கைகுண்டொன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே அவர் நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அவருடைய பிணை மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.
பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்வது, பிரதிவாதியின் உரிமையாகும். என்றாலும் சமூகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே, யாழ். மேல் நீதிமன்றம் இவ்வளவு காலமும் செயற்பட்டது. வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற சமூக விரோத செயற்பாடுகளை நசுக்கி, முற்றாக ஒழிக்க வேண்டுமாயின், சமூகவிரோத செயற்பாடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக அதியுட்சபட்ச தண்டனை விதிக்க வேண்டும்” என்றும் கூறினார்.