Ad Widget

வாள்வெட்டு சம்பவத்துடன் ஆவா குழுவுக்கும் தொடர்பென முறைப்பாடு

Avaa-groupதங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக யாழ். பூநாரி மரத்தடியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரான செந்தீஷன் (வயது 24) என்பவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கையில்,

தங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாகவும் செந்தீஷன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் இருவரின் பெயர்களையும் முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வாள்வெட்டுக்கு உள்ளானவர் தெரிவித்த இரு பெயர்களையுடைய நபர்களும் ஆவா குழுவுடன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

யாழ். பூநாரி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த கொக்குவிலைச் சேர்ந்த திலீப் (வயது 26), செந்தீஷன் (வயது 24) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த இவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

06 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல், மஞ்சவனப் பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த மேற்படி இரு இளைஞர்களையும் தாக்க முனைந்தனர்.

இந்நிலையில், அங்கிருந்து தப்பி காங்கேசன்துறை வீதி வழியாக வந்துகொண்டிருந்த இவர்களின் முச்சக்கரவண்டியை பூநாரி மரத்தடியில் இடைமறித்த அக்கும்பல், இவர்கள் இருவர் மீதும் வாள்கள் மற்றும் கோடாரிகளால் வெட்டியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆவா குழுவைச் சேர்ந்த 13 பேர் கடந்த பெப்ரவரி மாதம் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், இதன் தலைவரான ஆவா வினோதன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவிடமிருந்து 02 கிரனைட்டுக்கள், வாள், கத்தி, இரும்புக்கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts