Ad Widget

வாள்வெட்டு குற்றவாளிகளின் தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்ய யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு

மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுகக்ளின் அடிப்படையில் 6 எதிரிகளுக்கு எதிராக சுன்னாகம் பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனை வழங்கிய மல்லாகம் நீதிமன்றம், 6 லட்சத்து 61 ஆயிரதம் நட்டயீடு செலுத்துமறு எதிரிகளுக்கு 28.04.2016 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகள் தாங்கள் சுற்றவாளிகள் என தெரிவித்ததையடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பை மல்லாகம் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதனையடுத்து. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 3 எதிரிகள் யாழ் மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தனர்.

இந்த மேன் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணை காலத்தில் மனுதாரர்களுக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், எதிரிகள் சிறையில் இருக்க மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை வழக்கு நடைபெற்றது.

இந்த வழக்கு இம்மாதம் 12 ஆம் திகதி புதன்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி, மல்லாகம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட தினமாகிய 28.04.2016 திகதியில் இருந்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதனால். அந்தத் தினத்தில் இருந்து தண்டனை அனுபவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரி, மேன் முறையீட்டு மனுவை கைவாங்குவதாக நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பத்திற்கு அரச சட்டவாதி ஆட்சேபணை இல்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட ஓராண்டு கால கடூழியச் சிறைத் தண்டனைத் தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தி நீதிபதி இளஞ்செழியன தீர்ப்பளித்தார்.

அத்துடன், மல்லாகம் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட 6 லட்சத்து 61 ஆயிர் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் சரியான தீர்ப்பு என அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துமாறும், மல்லாகம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியில் இருந்து எதிரிகளின் சிறைத் தண்டனைக் காலம் கணிப்பிடப்பட வேண்டும் என சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவிக்குமாறு மல்லாகம் நீதிபதிக்கு யாழ் மேல் நீதிம்ன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த எதிரிகளிடம், மல்லாகம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், மேல் நீதிமன்றம் உங்களுக்குக் கருணை காட்டியுள்ளது. சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர், வரும் காலங்களில் எதுவிதமான வாள்வெட்டுச் சம்பங்களிலும் ஈடுபடக் கூடாது. சமூகம் திரும்பிப்பார்க்கத்தக்க வகையில் நற் பிரஸைகளாக வாழ வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழிய்ன அறிவுறுத்தினார்.

இந்த வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தனும், எதிரி தரப்பில் சட்டத்தரணி திருக்குமரனும் முன்னிலையாகியிருந்தனர்.

Related Posts