Ad Widget

வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸாரின் விசாரணை நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவற்றுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டையடுத்தே இந்த இடமாற்றத்துக்கு உத்தரவிட்டார் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்.

“யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு வன்முறைகளை கட்டுப்படுத்த கடந்த மாத இறுதியில் பொலிஸாரின் விடுப்புகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. அத்துடன் வாள்வெட்டு கும்பல்களை இலக்கு வைத்து பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டனர்.

எனினும் பொலிஸார் வருவதை முன்னாடியே அறிந்து கொள்ளும் சந்தேகநபர்கள், இடமாறிவிடுவார்கள். அவர்களுக்கு பொலிஸிலிருந்தே தகவல் வழங்கப்படுவதாக சந்தேகம் கொண்ட பொலிஸார், அது தொடர்பில் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தனர்.

அதுதொடர்பில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் குழு விசாரணை நடத்தியது. வாள்வெட்டுக் கும்பல்களுக்கு பொலிஸ் இரகசியத் தகவல்களை பொலிஸ் உத்தியோகத்தர் அப்பு தொலைபேசி ஊடாக வழங்கிவந்தமை விசாரணையில் அறியவந்தது.

அதனையடுத்து கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் அப்பு தம்மை திருட்டுக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு பயமுறுத்துவதாக சந்தேகநபர்கள் இருவர் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றின் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர்களுடைய வாக்குமூலத்தை பெற்று மேல் நடவடிக்கைக்காக மூத்த பொலிஸ் அத்தியட்சருக்கு அனுப்பி வைக்குமாறு மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts