Ad Widget

வாள்வெட்டுக் கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? – சிவாஜிலிங்கம்

வாள்வெட்டுக்கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கிலும் புலம் பெயர் தேசங்களிலும் செவ்வாய்க்கிழமை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

எனினும் வடமராட்சி பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்கு பல்வேறு நெருக்கடிகளை இரானுவம் மற்றும் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மக்கள் தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எதிராக தடையேற்படுத்திய இந்த நடவடிக்கைகளை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை சுப்பர் மடம் உட்பட சில பகுதிகளில் சிவில் உடையில் வாள்களுடன் சென்ற பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் மாவீரர் நாள் நிகழ்வை நடத்தக் கூடாதென்றும் மீறி நடத்தினால் நாலாம் மாடி செல்ல நேரிடுமென்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

சிவில் உடையில் வாள்களுடன் சென்று பொது மக்களை பொலிஸார் அச்சுறுத்துகின்றனர் என்றால் வாள்வெட்டுக் கும்பலுக்கு பொலிஸாரா வாள்கள் விநியோகம் செய்கின்றனர் ? அல்லது வாள்வெட்டுக் கும்பல்களை நெறிப்படுத்துகின்றனரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு இலங்கையில் தெற்கில் ஒரு நீதியும் வடக்கு கிழக்கில் ஒரு நீதியும் இருக்க முடியாது. அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளை மீறி மக்கள் ஒன்றுசேர்ந்து செயற்பட்டால் அடக்குமுறையாளர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Posts