Ad Widget

வாய்த்தர்க்கத்தை ஏற்படுத்திய மிருகபலி

யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலி (ஆடு வெட்டுதல்) தொடர்பான விடயத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (05) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, இந்தச் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி,
ஆலயங்களின் இடம்பெறும் மிருகபலியை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இதனை தடுக்க முடியும். அதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர், ‘சமயச் சடங்குகள், மக்கள் நம்பிக்கையில் தலையிடக்கூடாது. அதனைக் கட்டுப்படுத்தவும் கூடாது. அதற்கு பொலிஸாரின் பாதுகாப்பும் தேவையில்லை. ஆட்டின் சுகாதாரம் அதனை வெட்டுபவரின் சுகாதாரம் ஆகியவற்றை கண்காணிப்பது மட்டும் போதுமானது. சுகாதார வைத்தியதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் பொலிஸார் தேவையில்லை என்று சாடினார்.

அதனை ஏற்கமறுத்த சுகாதார வைத்தியதிகாரி, நாங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்கின்றோம். எங்களுடைய கடமைகளை செய்யவிடாது தடுக்கும் வேலைகளே நடக்கின்றன என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், இந்து வழிபாட்டுத் தலங்களில் மிருகபலியிடல் முறையில்லை. அவற்றை தடை செய்யவேண்டும் என்றார்.

கூட்டத்தின் திசையை மாற்றவேண்டாம். இது தொடர்பாக பிரிதொரு நாள் கதைப்போம் என மாவட்டச் செயலாளர் கூறியதையடுத்து, இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.

Related Posts