Ad Widget

வவுனியா அரச அதிபர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு விசாரணைக் குழு நியமிப்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதென வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 32 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வட மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து கடந்த 31 ஆவது அமர்வில் உறுப்பினர்கள் அவைக் கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் உறுதியளித்தமைக்கு இணங்க போராட்டம் கைவிடப்பட்டு அன்றைய அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, சபை அமர்வுகள் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் நேற்று மாகாண அமர்வு இடம்பெற்றபோது, தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விளக்கிக் கூறினார்.

Related Posts