Ad Widget

வவுனியாவில் மினிசூறாவளி

வவுனியாவில் நேற்று செவ்வாய்கிழமை கடும் மழையுடன் வீசிய மினிசூறாவளியினால் வீதியால் பயணித்தவர்கள் மீது மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என விபத்துக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் வீசிய மினிசூறாவளி காரணமாக பல வீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா, கண்டி வீதியில் உள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள வீதியில் பயணித்த இரு மோட்டர் சைக்கிள்கள் மீது மரமொன்றின் கிளைகள் முறிந்து விழுந்தமையால் அதில் பயணம் செய்த மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் பூனாவ பகுதியைச் சேர்ந்த கே.கருணாதிலக (வயது 35), தோணிக்கல்லைச் சேர்ந்த என்.கோகுலநந்தினி (வயது 23) மற்றும் அவரது மகனாகிய என்.வர்மிகன் (வயது 06) ஆகியோரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இது தவிர, கடும் காற்றுக் கரணமாக மன்னகுளம், அரபாநகர், பம்பைமடு, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், இராசேந்திரங்குளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன என வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

உக்கிளாங்குளம் பிரதான வீதியில் இரு இடங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீதியின் குறுக்காக விழுந்துள்ளதுடன் மின்சாரக்’ கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்திருந்த தொலைத்தொடர்பு கோபுரமொன்று கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்துள்ளது. எனினும் குளத்தின் வான் பகுதிக்குள் இக்கோபுரம் வீழ்ந்துள்ளமையினால் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை. இதேவேளை, தாண்டிக்குளத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் மடப்பள்ளிக்கு போடப்பட்டிருந்த கூரைகளும் சேதமடைந்தன.

தாண்டிக்குளத்தில் அமைந்திருந்த இராணுவத்தினரின் தேனீர்க்கடை மற்றும் அதனுடன் அமைக்கப்பட்டிருந்த மலசல கூடத்தின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களும் காற்றினால் அள்ளுண்டு வீதியில் விழுந்த போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதேவேளை இடி முழக்கத்துடன் சுமார் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக பெய்த கடும் மழையினால் வீதியோரங்கள், பள்ளமான பகுதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

நீண்ட கால வரட்சிக்கு பின்னர் பெய்த இம்மழை மிக அகோரமாக காணப்பட்டமையினால் பலரும் அச்சமடைந்து வீதியில் நடமாடுவதை தவிர்த்திருந்தனர் என்பதை அவதானிக்க முடிந்தது.

Related Posts