வவுனியா பகுதியில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் அத்தாய் குறிப்பிட்டுள்ளதாவது, “நேற்று (வியாழக்கிழமை) காலை தனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் நண்பியின் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது பெரியார்குளம் பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர், குறித்த மாணவிகளை தடுத்துநிறுத்தி, வலுகட்டாயமாக முச்சக்கரவண்டியில் ஏற்றி சாந்தசோலை பகுதியிலுள்ள யாருமற்ற வீட்டொன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கயிற்றினால் கட்டி சந்தேகநபர்கள் தாக்கியதாகவும் அலரி விதையைஅரைத்து வாயில் திணித்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவிகள் தங்களிடம் தெரிவித்தனர்” என பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.