Ad Widget

வவுனியாவில் தமிழ் இளைஞர் கடத்தல் ; இரு பெரும்பான்மையினத்தவர் கைது

வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெரும்பான்மையினரத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேரூந்து ஒன்றும் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர பேரூந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற குறித்த இளைஞன் உணவகம் நடத்தி வருகின்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா கொழும்பு பகுதியில் பயணிக்கும் தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலர், குறித்த இளைஞரின் கடைக்குச் சென்று தேனீர் கேட்டுள்ளனர்.

எனினும் குறித்த இளைஞரால் வழங்கப்பட்ட தேனீர் சூடாக இல்லாத காரணத்தினால், தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் குறித்த இளைஞருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் புதன்கிழமை இரவு 10.30 அளவில் குறித்த இளைஞன் உணவகத்தில் தனியாக நிற்பதை அவதானித்த குறித்த தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் முதல்நாள் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை மறந்து சமாதானமாகுவதற்கு அழைத்துள்ளனர்.

இந்த நிலையில் சமரசம் செய்வதற்காக அழைப்பதாக நினைத்துச் சென்ற குறித்த இளைஞன் மீது, இரும்புக் கம்பியால் அங்கிருந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் மயக்கமடைந்த குறித்த இளைஞனை தமது பேரூந்தில் ஏற்றி மதவாச்சிக்கு கொண்டு சென்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்ட கச்சான் விற்பனையில் ஈடுபடும் ஒருவர், குறித்த இளைஞனின் உணவகத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து, கடையில் இருந்தவர்கள் மதவாச்சி நோக்கி மின் விளக்கு அற்ற நிலையில் தனியார் பேரூந்து செல்வதை அவதானித்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தனர்.

இதனால் உசாரடைந்த தனியார் பேரூந்து சாரதியும் நடத்துநரும் குறித்த இளைஞனை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்துள்ளதுடன், கடத்தியதாக கூறப்படும் பேரூத்தினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts