Ad Widget

வவுனியாவிலும் எச் 1 என் 1 மக்களே மிக அவதானம்

“வவுனியாவிலும் “இன்புளுவன்சா’ வைரஸ் நோய் தாக்கம் உள்ளமையால் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்” என்று வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் இறந்தமை தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளிவந்த நிலையில், உண்மை நிலையை அறியும்பொருட்டு அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சில நாள்களுக்கு முன்னர் முல்லைத்தீவிலிருந்து கர்ப்பிணிப் பெண்ணொருவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் வவுனியாவுக்கு மாற்றப்படும் போதே ஆபத்தான நிலையை எட்டியிருந்தார். நாம் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அவரைச் சேர்த்து சிகிச்சை அளித்தோம் “இன்புளுவன்சா எச் 1 என்1′ வைரஸ் தாக்கத்திற்கு அப்பெண் உள்ளாகியிருந்தார்.

நோய் தாக்கி 48 மணிநேரம் கடந்திருந்தமையால் எமது சிகிச்சைகள் பயனளிக்கவில்லை.
இந்த வைரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் தாக்கும் ஆபத்து அதிகமுள்ளது.

தொண்டை கரகரப்பு, முகம் சிவத்தல், நீர் போன்ற திரவம் மூக்கால் வடிதல், சுவாசிப்பதற்குச் சிரமப்படுதல் போன்றன இந்த நோயின் அறிகுறிகள்.

அறிகுறிகள் காணப்படும் பட்சத்திலும், ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டாலும் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடிச் சிகிச்சைபெறுவதே சிறந்தது.

சிகிச்சைபெறத் தவறும் பட்சத்தில் 24 மணிநேரத்தில் இதன் தாக்கம் அதிகரித்து சுவாசப் பகுதி சேதமடைவதுடன் 48 மணிநேரத்தின் பின்னர் ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும்.

வவுனியாவிலும் இந்த வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதனால் மக்கள் இந்த நோய்த்தாக்கம் தொடர்பில் மிக அவதானத்துடன் இருப்பது அவசியமானதாகும் என்றார்.

Related Posts