Ad Widget

வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய குழு – ஜனாதிபதி

குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலமாக வெலிக்கடையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிப்பதாக தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று (10) மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.

திறந்த வெளியில் நடமாடிக்கொண்டிருந்த சிறைக் கைதிகளுடன் உரையாடிய ஜனாதிபதி, அவர்களது விபரங்களை கேட்டறிந்தார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் பாவனையின் காரணமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருபவர்களாகும்.

சிறைக் கைதிகளின் எண்ணிக்கைக்கு போதுமான இடத்தைப் பார்க்கிலும் மும்மடங்கு எண்ணிக்கையானவர்கள் சிறையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பிழையான தகவல்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு அதிக காலம் செல்வதாகவும் அவர்கள் ஜனாதிபதி தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமக்கு நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய நிலமை குறித்து கண்டறிவதற்கு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார் – என்றுள்ளது.

Related Posts