Ad Widget

வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்திய மீனவர்களால் வலைகள் நாசம்

வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரம் வரை வந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் செவ்வாய்க்கிழமை (08) , அப்பகுதியிலிருந்து சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சென்ற மீன்வர்களின் வலையை நாசமாக்கியதில் இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் காற்றுக்கடலாக இருந்ததனால் கடற்படையினர் கடலில் இல்லாததால், 500 வரையான றோலர்களில் வந்த இந்திய மீனவர்களே இவ்வாறு அட்டகாசம் புரிந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு கடற்படையினர் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ள போதிலும், கடலில் காற்று அதிகமாக வீசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் வருவதில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்பரப்புக்கு வந்த இவர்கள் மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4 வரை அப்பகுதியில் நின்றிருந்ததாகவும், அவர்களுக்கு அருகில் செல்லும்போது, தமது சிறிய கண்ணாடி இழைப் படகுகளை, பெரிய றோலர்களால் முட்டி சேதப்படுத்துவதாகவும், வாள்களை கொண்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிக மீன்கள் பிடிபடும் தற்போதைய பருவகாலத்தில், மாதகல் முதல் நாகர்கோவில் வரை இவர்களின் அட்டூழியம் தொடர்ந்து தமது வளங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Posts