வலி. வடக்கு விவகாரம்; உள்நாட்டு பிரச்சினையாகும்: அமெரிக்க தூதுவர்

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

vicky-amerecca

அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இதன் பின்னர் அமெரிக்க தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அதன்போது வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு கருத்துத் தெரிவித்த தூதுவர், “இந்த பிரச்சினை உள்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையாகும். இது தொடர்பாக நான் எதுவித கருத்துக்களையும் கூறமுடியாது” என்றார். அங்கு தொடந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர்,

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவினால் உதவிகள் மேற்கொள்ளப்படும். வட மாகாணத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன், வட மாகாணத்தில் முதன்முறையாக முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டமை சந்தோசமளிக்கின்றது. வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளினை அமெரிக்க அரசாங்கம் வழங்கும்” என்றார்.

இதேவேளை, வலி. வடக்கு வீடுகள் உடைப்பு பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts