Ad Widget

வலி.வடக்கு மீள்குடியேற்றப் பகுதியிலுள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழு ஆய்வு!

வலி. வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் கீரிமலைப் பகுதிகளை மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

maviddapuram-kiremalai-suwamy-nathan

இவருடன் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வட மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வலி. வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோ.சுகிர்தன், யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி, விமானப்படைத்தளபதி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வலி. வடக்கு உதவி பிரதேச செயலாளர், வலி. கிழக்கு பிரதேச செயலாளர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

இதன்போது மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சில பகுதிகளை இராணுவம் பிடித்து வைத்திருப்பது சம்பந்தமாக அங்கு கவனம் செலுத்தப்பட்டது.

விடுவிக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றில் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காணி விடுவிக்கப்பட்டு அதற்கான வீதி விடுவிக்கப்படாமை, தோட்டக்காணி விடுவிக்கப்பட்டு குடியிருப்பு காணி விடுவிக்கப்படாமை போன்று பல்வேறு பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன.

இவற்றை நேரில் அவதானித்த அமைச்சர் குழுவினர், இராணுவத்தினருக்கு தெளிவுபடுத்தி அது சம்பந்தமான அறிக்கையைத் தரும்படி அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து இன்று யாழ். அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ஊடகவியலாளர்கள், கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு சென்ற வேளை அமைச்சின் செயலாளர் ஒருவர் அவர்களை வெளியேறுமாறு பணித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Posts