Ad Widget

வலி.வடக்கு மீள்குடியமர்வுக்கு எண்ணிக்கை ஒரு தடையல்ல – அரச அதிபர்

dak-suntharam-arumainayagam-GAவலி.வடக்குப் பகுதியில் மீள் குடியமர்த்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சினையே இல்லை. அது குறித்து விவாதிப்பதை விடுத்து மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.

வலி.வடக்கு மீள்குடிமயர்வு தொடர்பில் தொடர் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மீள்குடியமர்வுக்கான புள்ளி விவரங்கள் ஒவ்வொரு தரப்பினராலும் ஒவ்வொரு விதமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் மீள்குடியமர்வு தொடர்பான புள்ளி விவரத்துக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் மீள்குடியமர்வு தொடர்பான எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்ட அரச அதிபர் மீளக்குடியமர வேண்டியவர்களின் புள்ளி விவரங்களை குறைத்து வெளியிடுகின்றார் என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்துக் கருத்துக் கேட்ட போதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது பிரச்சினையல்ல “மீள்குடியமர்த்தப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஒரு பிரச்சினையல்ல. மக்களின் மீள்குடியமர்வுதான் முக்கியம். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மேற்கொண்ட பதிவுகளுக்கு அமைய 9 ஆயிரத்து 34 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளன என்று கூறப்படுகின்றது.”

கற்பனையில்லை

“என்னால் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் 5 ஆயிரத்து 848 குடும்பங்கள் வலி.வடக்கில் மீள்குடியமர்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரமே நான் அவற்றைத் தெரிவித்தேன். நான் புதிதாக கற்பனையில் அதனைத் தெரிவிக்கவில்லை.

நான் வழங்கிய தகவல்களுடன் தற்போது பிரதேச செயலகங்களில் ஒப்பீடு செய்து பார்த்தபோது 387 குடும்பங்கள் வித்தியாசப்படுகின்றன. வலி.வடக்கில் மீளக்குடியமர்வதற்கு யாழ்ப்பாணத்தில் 6 ஆயிரத்து 235 குடும்பங்கள் இருப்பதாகவே தெரிவிக்கின்றேன்.”

வரையறுக்க முடியாது

“இந்த எண்ணிக்கையினர் தான் வலி.வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் என்று நான் சொல்லவில்லை. வெளிமாவட்டங்களில், வெளியிடங்களில் இருப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. யாழ்.மாவட்டத்தில் இவ்வளவு பேர்தான் வலி. வடக்கில் மீளக்குடியமர இருக்கின்றார்கள் என்பதைத்தான் என்னால் கூறமுடியும். நாங்கள் வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கின்ற போது, எங்களிடம் பதிவில்லாத அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், குடியமர வந்தாலும் நாங்கள் அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts