Ad Widget

வலி.வடக்கில் மீண்டும் காணி சுவீகரிப்பு? : பிரதேச மக்கள் எதிர்ப்பு!

வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் மீண்டும் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் மேலும் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதியினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீளச் சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீளச் சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் இல்லையெனில் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

Related Posts