Ad Widget

வலி.வடக்கில் எஞ்சியவற்றை களவாடும் திருட்டுக் ‘கோஷ்டி’!

வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமக்கு சாதமாக்கிக் கொண்ட சிலர் குழுக்களாக இணைந்து இராணுவம் அழித்தது போக எஞ்சியிருக்கும் வீடுகளை உடைத்து கதவு, யன்னல்களின் நிலைகள், இரும்புக் கம்பிகள் என்பவற்றை களவாடுகின்றன.

அத்துடன் இந்த திருட்டுக் குழுவினர் காணிகளில் நிற்கும் பெறுமதி வாய்ந்த மரங்களான வேம்பு, தேக்கு, பலா, பூவரசு மரங்களை வெட்டி வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.

இவர்களை மக்களும் அதிகாரிகளும் தடுக்க முற்பட்ட போது தங்களின், தங்கள் உறவினர்களின் காணி என்று கூறியும், மிரட்டியும் உள்ளனர்.

இந்த விடயம் குறித்து தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த திருட்டுக் குழுக்கள் தொடர்ந்தும் இப்பகுதிகளில் தங்கள் கைவரிசைகளை தொடர்கின்றன என மக்கள் கவலை தெரிவித்தனர்.

Related Posts