Ad Widget

வலி நிவாரணி மருந்துகளை சிலர் போதைக்காக பயன்படுத்துகின்றனர்

வலி நிவாரணி மருந்துக்களை சிலர் போதைக்காக பயன்படுத்துவதனால் வலி நிவாரணி மருந்துக்களை கட்டுப்பாட்டுடன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் இளவயதினரே பெரும்பாலானவர்களாக உள்ளனர். போதைப்பொருள் பாவனையால் மூளையின் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் கூறினார்.

சிலர் போதைக்காக சில மருந்துகளை அதிகமாக பாவிக்கின்றனர். சில மருந்துகளை, பாவிக்க வேண்டிய அளவுக்கு அதிகமாக பாவிக்கும் போது, அதனால் போதை ஏற்படும். அந்த மருந்து வகைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள கூடியதால் அதனை பாவிக்கின்றனர். இதனால் அவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று காட்சியளிப்பார்கள். அதற்கு அடிமையானவர்கள் அம்மருந்துகள் பாவிப்பதை திடீரென்று நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்தினால் அவர்களுக்கு வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்து, சிறிது சிறிதாக அவர்களை மருந்துகளை பாவிப்பதிலிருந்து மீட்க முடியும். மருந்து கொடுத்து அவர்களை மீட்க முடியாது.

போதைப்பொருள் பாவனையில் இருந்து அனைவரையும் மீட்டெடுக்க வேண்டுமாயின், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts