Ad Widget

வலிகாமம் வலயத்துக்கு ஆசிரியர்கள் மாற்றம்; விளக்கம் கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

Human_rightsவெளிமாவட்டத்தில் இருந்து யாழ். கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர்கள் 33 பேருக்கும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் விளக்கம் கோரியுள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ். வலய கல்விப் பணிப்பாளர் ஆகிய மூவரிடமும் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து யாழ். கல்வி வலயத்துக்கு விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு யாழ். கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நியமனம் வழங்கி வதிவிடங்களுக்கு அருகில் கடமை புரிவதற்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்,தங்களை வலிகாமத்துக்கு இடம் மாற்றி இருப்பது அடிப்படை உரிமை மீறல் என்பதை வலியுறுத்தித் தங்களுக்கு வதிவிடங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் நியமனம் வழங்க ஆவன செய்ய வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் கூட்டாகவும், தனித்தனியாகவும் முறையீடு செய்திருந்தனர்.

முறையீட்டை ஏற்றுக்கொண்ட யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இந்த இடமாற்றம் தொடர்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் விபரமாக விளக்கம் கேட்டுள்ளார்.

முறைப்பாடு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தகவல் தெரிவிக்கையில் “வெளி மாவட்டத்தில் இருந்து யாழ். கல்வி வலயத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ள 33 ஆசிரியர்களும் இந்த மாதம் 15 ஆம் திகதி (நேற்று) தமது புதிய பாடசாலைகளில் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்டவர்களிடம் குறுகிய கால அவகாசத்தில் விளக்கம் தருமாறு கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தை அறிந்த பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:

நாங்கள் குறிப்பிட்டகாலம் அதிகஷ்ட, கஷ்டப் பிரதேசங்களில் வெளிமாவட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றிய பின்னர் யாழ். கல்வி வலயத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளோம். எமது வதிவிடங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமை புரிவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். அதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கோரிக்கை நியாயமானது. எனத் தெரிவித்தனர்.

Related Posts