Ad Widget

வலிகாமம் கல்வி வலயத்தில் அதிகார துஸ்பிரயோகம்!!

வடமாகாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தில் சில அதிபர்களினதும் அதிகாரிகளினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் முகமான இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் தவறுவிடும் கல்விப்புல அதிகாரிகள் – தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நடைமுறையையும் மற்றவர்களுக்கு வேறுநடைமுறையுமாக பாரபட்சத்தைக்காட்டி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக – வலிகாமம் கல்வி வலய அதிபர் ஒருவரினால் பாடசாலையின் முதல் நாளான நேற்று 02.01.2020 ஒரு ஆசிரியரை கையொப்பமிட அனுமதிக்காத சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. இதற்கு வலிகாமம் வலய கல்வி பணிமனையின் அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் வம்மையாகக் கண்டிக்கிறது என அதன் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறித்த ஆசிரியர் ஒருவருக்கு கடந்த வருட பிற்பகுதியில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடமாற்றம் பாரபட்சமான முறையில் நடைபெற்றதென குறித்த ஆசிரியர் மேன்முறையீடு செய்திருந்தார்.

மேன்முறையீட்டுக்கான பதில் வலிகாமம் வலய கல்விப்பணிமனையினரால் அனுப்பப்படாதிருந்த நிலையில் – குறித்த ஆசிரியரை பழைய பாடசாலையில் கையொப்பமிட அனுமதித்திருக்க வேண்டும். அந்த நடைமுறையே தாபன விதிக்கோவையிலும் – 2007/20 தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியரை கையொப்பமிட அதிபர் அனுமதிக்காமை அதிபரின் அதிகார துஸ்பிரயோகமாகும்.

இவ்விடயம் தொடர்பாக கையொப்பமிட நடவடிக்கை எடுக்குமாறு வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையினரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டும் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவசரஅவசரமாக குறித்த ஆசிரியருக்கு இடமாற்றக்கடிதம் வழங்கவே நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இடமாற்றம் வழங்கும் நடவடிக்கையின்போது இடமாற்றக்கடிதம் கிடைக்கும் ஒரு ஆசிரியர் தனது கடமைப்பொறுப்புக்களை ஒப்படைத்து, தனக்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்குவது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வலிகாம் வலயக்கல்விப்பணிமனையினரால் குறித்த ஆசிரியருக்கு கால அவகாசம் வழங்காது பாரிய அநீதி இழைக்கும் முயற்சி நடைபெற்றுள்ளமை மிகப்பெரிய முறைகேடும் அதிகார துஸ்பிரயோகமுமாகும்.

குறித்த ஆசிரியரை கையொப்பமிட அனுமதிக்காத முறையற்ற செயற்பாடு குறித்து குறித்தபாடசாலை அதிபருக்கெதிராகவும் அதற்கு உடந்தையாக இருந்த வலிகாமம் வலயக்கல்வி அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கையை கல்வியமைச்சு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த ஆசிரியருக்கு மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் உள்நோக்கம் கொண்டது என்பதும் அதிபரதும் அதிகாரிகளினதும் முறையற்ற நடவடிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.

எனவே இவ்விடயங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வடமாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரிடமும் முறையிடவுள்ளதாக ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts