வறட்சியால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு உதவி

வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் 17 மாவட்டங்களில் 10 இலட்சத்து 89 ஆயிரத்து 3 மக்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 308 பேர், யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 206 பேர், குருணாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 992 பேர் , புத்தள மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 241 பேர் , மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts