Ad Widget

வர்த்தக நிலையங்களில் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் -யாழ் வணிகர்கழக தலைவர்

யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய கோவிட் -19 நிலமைகளை எவ்வாறு கையாளுவது தெடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தகர்களுக்கான அறிவித்தலாக தற்போது நாட்டில் கோவிட் -19 மிக மோசமாகப்பரவி வருகின்றது. இப்பரவல் காரணமாக உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது என செய்திகள் மூலம் அறிகின்றோம்.

சுகாதார துறையினரும் தொடர்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள். எனவே எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்து கொள்வது நம் ஒவ்வொருடைய கடமையாகும். நகர வர்த்தகர்கள் உள்பட அனைத்து வர்தகர்களும் தங்கள் வர்த்தக நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் உரிய சுகாதார விதிமுறைகளையும் இறுக்கமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். உணவு விநியோகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கும் முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதுமட்டுமன்றி பொதுமக்களும் வர்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து வர்தகர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொருள்களை வீடுகளுக்கு கொண்டுவரும் நடைமுறையை பின்பற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கோவிட்- 19 பரவல் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக திருகோணமலை, பதுளை மேலும் சில இடங்களில் உள்ள வர்த்தக சங்கங்கள் தங்களது பிரதேச கடைகளை சில வாரங்களுக்கு மூடியுள்ளதாக அறிகின்றோம்.

எனவே எமது பகுதியிலும் இவ்வாறான சூழ்நிலை ஏற்படாதிருக்க வர்த்தகர்களாகிய ஒவ்வோருவரும் அதியுட்ச கட்டுப்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் வணிகர் கழகம் சார்பாக தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts