Ad Widget

வர்த்தகர்களின் பிரச்சனைகளை தீர்க்க நியதிச் சட்டம் கொண்டுவரல் வேண்டும்

Deneeswaranவர்த்தகர்களின் பிரச்சினைகளை சட்ட ரீதியாக தீர்வு காண்பதற்கு நியதிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து மற்றும் வணிக அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

வங்கி முகாமையாளர்களுக்கும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ். வணிகர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தென்னிலங்கை வியாபாரிகளின் வருகையினால் வட மாகாணத்திலுள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளினை மேற்கொள்வதில் பெரும் சவால்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்துவதற்கு நாம் முற்பட்டபோது அவை சில காரணங்களினால் தடைப்பட்டுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து வரும் வியாபாரிகள் உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு வரி செலுத்தியே வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஆகையால் இவர்களை தடுக்க முடியாது. மாறாக இவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமெனவும் அதற்காக நியதிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் இது தொடர்பாக முதலமைச்சருடன் கதைத்துள்ளேன்.

அத்துடன், தென்னிலங்கை வியாபாரிகளுக்கு வழங்கும் இடங்களை எமது வியாபாரிகளுக்கு வழங்குமாறு சில நகர சபைகளுக்கு கூறியிருக்கின்றேன். ஒரு காலத்தில் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் எல்லோரும் தற்போது ஒடி மறைந்து விட்டார்கள்.

அந்தளவுக்கு தற்போது நமது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நம்மிடம் உரிய பணமில்லை. அதற்காக நாம் எதுவுமே செய்யாமல் இருக்க முடியாது. எமக்கு பண உதவி செய்ய பல தொண்டு நிறுவனங்கள் தயராகவுள்ளன. அவைகள் அனைத்தும் சரியான முறையில் மக்களை சென்றடைய வேண்டும்.

இதனை முதலமைச்சருக்கு நான் தெரியப்படுத்தியுள்ளேன். பல கிராம மட்ட வீதிகள் படுமோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனால் பின்தங்கிய கிராமத்திலுள்ள கர்ப்பிணி பெண்ணொருவர் அண்மைக்காலத்தில் அவ்வீதியில் குழந்தை ஒன்றினை பிரசவித்த சம்பவம் கூட நடந்துள்ளது.

யுத்த முடிவின் பின்னர் பெருமளவு நிதி நிறுவனங்கள் வட மாகாணத்தை நோக்கி வந்துள்ளமையால் நிறைய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தவணை முறையில் செலுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு மாத காலத்தின் பின் அதே நிறுவனத்தை சென்றடைந்துள்ளன. எனினும் நிதி நிறுவனங்களினை ஒதுக்கிவிட்டு நாம் பொருளாதார நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாது.

எமது தேவைக்கு ஏற்ப கடன்பெற்று தொழில்களினைச் செய்ய வேண்டும். அவ்வாறு கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியன கடன் வாங்குபவர்களை சரியான முறையில் கண்கணிக்க வேண்டும். வர்த்தகத்துறை போன்று சுற்றுலாத்துறை, போக்குவரத்துறைகளிலும் இவ்வாறான பல பிரச்சனைகள் உள்ளன. வட மாகாணத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சில பாடசாலைகள் இப்போதும் தென் பகுதியில் இயங்குகின்றன.

இவை அனைத்தும் வட மாகாணத்தின் கட்டுபாட்டிற்குள் வர வேண்டும். இதுபோன்று யுத்த காலத்தில் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களும் மீண்டும் இங்கு வர வேண்டும். இல்லையெனில் அவர்களது காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும்.

அத்தோடு பனம்பொருட்கள் உற்பத்திகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ் உற்பத்திக்களுக்கான கடன் கேட்டு வரும் வர்த்தகர்களுக்கு வங்கிகள் உதவ வேண்டும்” என்றார்.

Related Posts