Ad Widget

வரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்!

இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45.சடுதியாக இந்த இளவயதில் எம்மை விட்டு பிரிந்தது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.இறுதி வரை இணையத்தில் இணைப்பில் இருந்திருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலத்தில் இருந்து தமிழ் இணைய மாநாடுகள் சிறப்பாக நிகழ அரும்பாடு பட்டு உழைத்த செயல்வீரர்களில் ஒருவர் ஆன்ரோ பீற்றர். ஆழ்ந்த தமிழ்ப் பற்றும், செயலாற்றல் திறமையும், கணித்தமிழின் வளர்ச்சியில் ஈடுபாடும் ஒருங்கே பெற்ற இவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

கணினி மென்பொருள் துறையில் 3 ஆண்டு பட்டயப்படிப்பையும், கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், முகாமைத்துவ துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கும் இவர் தனது நிறுவனம் மூலம் தமிழ் மென்பொருள் தயாரித்தல், கணினி, இணையம், பல்லூடகம், எழுத்து வரைகலை, அசைவூட்டம், காட்சி சார் தொடர்பு போன்ற கணினி சார்ந்த துறைகளுக்கு தமிழில் பயிற்சியும் அளித்து வந்தவர்.

தந்தைபெரியார் விருது கணியரசு விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, சினிமா வரைகலை மற்றும் இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். இவரின் மறைவு தமிழ் தகவல் தொழில்நுட்ப துறைக்குப் பேரிழப்பு. தமிழில் கணினி குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்பற்றிய மேலதிக விபரங்களுக்கு
http://antopeter.blogspot.com/
http://ta.wikipedia.org/wiki/

Related Posts