Ad Widget

வரிச்சலுகையை பெற மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச மட்டத்திலான அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அமர்வின் போது, அரசியலமைப்பை தயாரித்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், ஊடக சுதந்திரம், பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை பலப்படுத்தல், காணிகளை மீள வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகளில் மேலும் முன்னேற்றம் தேவை என்பதனை இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதன் அவசியத்தை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவையும், நிதி உதவியையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts