லஞ்சம் வாங்கியே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆதவராக வாக்களித்த சந்தர்ப்பங்களில், எவ்வளவு லஞ்சம் வங்கினீர்கள் என, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சிவசக்தி ஆனந்தனிடம், பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், தலா இரண்டு கோடி லஞ்சம் வாங்கியதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில், வவுனியாவிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைத்து உரையாற்றிய சுமந்திரன், சிவக்தியிடம் இரண்டு கோடி லஞ்சம் குறித்து பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது, சுமந்திரன் மேலும் குறிப்பிடுகையில், “இந்த வரவு செலுவுத் திட்டத்தில் வாக்களிப்பதற்காக, இரண்டு கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, நடேசு சிவசக்தி வவுனியாவில் வைத்து குற்றம் சுமத்தியுள்ளார். நடேசு சிவசக்தி என்பவர் இதற்கு முன்னர் பல வரவு செலவுத் திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச காலத்தில்கூட அவர், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த புதிய அரசாங்கத்தில் இதற்கு முதல் இரண்டு தடவைகள் அவர் ஆதரவாக வாக்களித்துள்ளார்.
அவரிடம் நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி ஆதரவாக வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்கித் தான் வாக்களிப்பதாக இருந்தால், இதற்கு முன்னர் நீங்கள் ஆதரவாக வாக்களித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று, மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்” என்றும் கூறினார்.