Ad Widget

வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை!

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் மக்களுக்கான எவ்வித சலுகைகளும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்த்தாலும் அவரால் அதனைச் செய்ய முடியாது. ஏனெனில், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெற்றுள்ளது. அதற்காக நாணய நிதியத்­துடன் உடன்ப­டிக்கை ஒன்று செய்யப்பட்டுள்து.

அவ்வுடன்படிக்கையின் பிரகாரம் ஐந்து பிரதான நிபந்தனைகள் உள்ளன. அதாவது அரசாங்கத்தின் வருமானத்தை விரைவாக அதிகரிக்க வேண்டும், அரசாங்கத்தின் செலவுகளை முடியுமான வரையில் குறைக்க வேண்டும், வரவு மற்றும் செலவின் இடைவெளியைக் குறைக்க வேண்டும், நாணயத்தின் பெறுமானத்தை அதிகரிக்க வேண்டும், அரசாங்கத்தின் நஷ்ட மீட்டும் நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் அல்லது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பனவே அந்நிபந்தனைகளாகும்.

எனவே குறித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வரவு செலவுத்திட்டம் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நிதியமைச்சர் தள்ளப்பட்டுள்ளார். ஆகவே சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது” என கூறினார்.

Related Posts