Ad Widget

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும்

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய இடம் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலம் என்பதும் இன்று பலருக்கு தெரியாது. ஆக, எமது இடங்களில் வரலாற்று முக்கியத்துவங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களையும் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டடங்களையும் பாதுகாக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலரஜா தெரிவித்தார்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு திங்கட்கிழமை (22) பாடசாலை மண்டபத்தில் அதிபர் தி.மோனபாலன் தலைமையில் நடைபெற்றபோது, அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இற்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னர் காற்றோட்டம், சூரிய வெளிச்சம் என்பன உட்புகும் வகையில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. மின்சாரம் இல்லாத நிலையிலும் மிகுந்த திட்டமிடல்களுடன் முன்னோர்கள் கட்டடங்களை அமைத்தார்கள்.

இன்று அந்தக் கட்டடங்களை அழித்துவிட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எமது முதுசங்கள் பாதுகாக்கப்படுவதில்லை. பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை 75 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்த கட்டடத்தை இன்றும் பாதுகாத்து அதில் விழாக்கள் நடத்திக்கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண குடாநாட்டில் பொன்னாலை என்ற பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடம். பனைவளம் உள்ள பிரதேசம். பொன்னாலை வீதியூடாக செல்லும்போது திருவடிநிலை, கீரிமலை உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் இருக்கின்றன. இந்த வீதியால் விரைவாக கீரிமலைக்கு செல்ல முடியும்.

இதேவேளை, பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்களுக்கு ஆசிரியர்களே பாதுகாப்பாக இருக்கவேண்டும். அவர்களுக்கு நல்லறிவைப் புகட்டுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும், கூடாத பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் அவர்களுக்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Related Posts