Ad Widget

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

வட மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்ட போதே இதனை தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிந்துள்ளதாகவும் பாதிப்புக்கள் தொடர்பாக முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்ட நிலையில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டியது கட்டாயம். இதேபோல் விவசாயிகளை காப்புறுதி செய்யுமாறு பல தடவைகள் வலியுறுத்தியுள்ள போதிலும் விவசாயிகள் அவை தொடர்பாக கருத்தில் கொள்ளவில்லை.

நல்ல விளைச்சல் வரும்போது எங்களுடைய கருத்தை குறித்து சிந்திக்காத விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும்போது எங்கள் கருத்துக்களை பற்றி சிந்திக்கிறார்கள். இது மோசமான நிலையாகும்.

அதேபோல் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமார் நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக வறட்சியினால் குடிநீரை பெற முடியாத நிலை காணப்படுவதனால் மக்கள் பல கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related Posts