Ad Widget

வயல் நிலங்களை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது

nelயாழ்.மாவட்டத்தில் வயல் நிலங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பலருக்கு வீடுகளை கட்டமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது .

யாழ்.மாவட்டத்தில் இந்திய அரசின் வீட்டுத்திட்டத்திற்கு பயனாளிகளைத் தெரிவு செய்யும் பொழுது வீடு கட்டவுள்ள காணிகளின் உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்கள் கோரப்பட்டிருந்தன. முன்னுரிமை அடிப்படையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீள்குடியேறிய குடும்பங்கள் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தன.

தேச வழமைச் சட்டத்தின் பிரகாரம் காணி உறுதிகள் எழுதும் போது வயல் நிலங்கள் நன்செய் நிலமாகக் கருதப்பட்டு நெற்பரப்பு அடிப்படையில் ஆதனத்தின் அளவு நெற்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஏனைய நிலங்கள் நிலப்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வகையில் நெற்பரப்பு எனக் குறிப்பிடப்பட்டு உறுதியில் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் வீடுகட்டுவதற்கு அனுமதி பெறமுடியாது. இதனால் நெற்பரப்பு எனக்குறிப்பிட்டுள்ள உறுதிகளை சமர்ப்பித்த வீட்டுத்திட்ட பயனாளிகள் வீடுகட்டுவதற்கான உதவியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையால் யாழ். மாவட்ட பிரதேச செயலர் பிரிவுகளில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு செய்யப்பட்ட பயனாளிகள் தமக்கான வீட்டுத்திட்டத்தை பெறமுடியாதிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

நெல்வயல்கள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்ளும் இடங்களை மாற்றியமைத்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை கமநல சேவைத் திணைக்களம் மற்றும் கமநல சேவை நிலையங்கள் கிராமிய மட்டத்தில் விவசாய சம்மேளனங்கள் என்பன கண்காணித்து வருகின்றன.

வயல் நிலங்களை உரிய தேவைக்கு பயன்படுத்தாது மாற்றத்துக்கு உள்ளாக்குவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் இந்திய வீட்டுத்திட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Posts