Ad Widget

வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு

தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார்.

mahintha-thesappireya

நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், ‘கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்’ என சுட்டிக்காட்டினார்.

‘இது நிறுத்தப்படாதவிடத்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அத்தோடு வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு செல்லவிடாது தடுத்தல், அவர்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டை என்பவற்றை சேகரித்தல் என்பன மோசமான குற்றங்களாகும். 1990களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மூலம், வன்முறை காணப்படுமிடத்து மீள் வாக்கெடுப்பு நடத்த தனக்கு அதிகாரம் கிடைத்துள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘அந்த நேரத்தில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு போகவிடாது தடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓர் அடிப்படை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது போக எனது கரங்களை பலப்படுத்தும் பல முக்கிய வழக்கு தீர்ப்புக்கள் உள்ளன. இம்முறை வாக்காளர்கள் தடுக்கப்படுவர் எனும் பயம் உள்ளது. இந்தப் பயத்தை நீக்க நான் விரும்புகின்றேன். வாக்காளர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது.

தேர்தல் கடமைகளில் பொலிஸ் அதிகாரிகள் மட்டும் ஈடுபடுத்தப்படுவர். இந்த தேர்தலில் இராணுவம் எந்த விதத்திலும் ஈடுபடுத்தப்பட மாட்டாதென நான் உறுதியளிக்கின்றேன். பொலிஸ் மா அதிபர் தனது முழு ஆதரவையும் எனக்கு வழங்குவதாக கூறியுள்ளார். வாக்குச்சாவடியில் சீருடை அணிந்த பொலிஸ் மட்டும் ஆயுதங்களுடன் நடமாட முடியும்’ என அவர் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஐந்து பிரதிநிதிகள் இருப்பர். இதனால் ஊழல் நடைபெறும் என கவலையடையத் தேவையில்லையென தேர்தல் அவர் கூறினார்.

வேட்பாளர்கள் தமது பிரதிநிதிகளை பி.ப 3.00 தொடக்கம் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பலாம். காட்சிப்படுத்தப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரதிகள் அவர்கள் யாவருக்கும் வழங்கப்படும். இதனை இறுதிக்கட்ட கணக்கெடுப்பின் போது முடிவுகளை மாற்றுதல் தொடர்பான பயம் நீக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டி கொண்டு போகையில் அரசியல் கட்சிகள் அதைத் தொடர்ந்து செல்ல முடியும். இயன்றளவு நேர காலத்துக்கு வாக்களிக்குமாறு அவர் வாக்காளர்களிடம் கேட்டுள்ளார்.

எனக்கு சமய சுதந்திரத்தில் தலையிடும் உரிமை இல்லை. இருப்பினும் தனிப்பட்ட வேட்பாளரின் உயர்வுக்கான சமய நிகழ்வுகளை குருமார் நடத்த வேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts