Ad Widget

வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம்: முதலமைச்சர் சி.வி.

இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உளநலமருத்துவ விடுதி மற்றும் வைத்தியவர்களுக்கான விடுதி என்பனவற்றை இன்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர்,

”உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் விசேட கவனிப்புக்களுடன் சமூகத்தில் இணைக்கப்படாவிடின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள். அவர்களின் தனிமையே அவர்களைக் காலனை நோக்கிப் பயணிக்கச் செய்கின்றது.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவபீட மாணவர்கள் எனப் பலர் அண்மைக்காலங்களில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதை நாம் அறிவோம். அதிர்ச்சி, பயம், பீதி, குற்ற உணர்ச்சி எனப் பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தயார் செய்து விடுகின்றன.

இன்று இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகள் பாலியல் வன்முறைகள், சமூக வன்முறை ஆகியனவும் குடும்ப வன்முறைகளும் உளவியல் தாக்கங்களின் இன்னோர் வடிவம் எனவே கொள்ளப்பட வேண்டியுள்ளன” என்றார்.

Related Posts