Ad Widget

வணிகர் கழகத்தின் இறுக்கமான நடைமுறைகள் இன்றுமுதல்

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கீழுள்ள வர்த்தக நிலையங்கள், பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டத்துக்கு முறையான நடைமுறைகளை, யாழ். வணிகர் கழகம், திங்கட்கிழமை (01) முதல் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக யாழ். வணிகர் கழகத்தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த மே 26ஆம் திகதி நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் பாவனையாளர்கள் உடனான கலந்துரையாடலில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு வர்த்தகர்களும் தங்கள் வர்த்தக நிலையங்களில் அரசாங்கத்தின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவை அளவீட்டு உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தல்.

ஒவ்வொரு வர்த்தகரும் தங்களால் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறுவை அளவீட்டு உபகரணங்களையும் ஒவ்வொரு பன்னிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைககள் திணைக்களத்தால் இலட்சினையிடப்பட்டதையே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வர்த்தக நிலையங்களிலும் பாவனையாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களின் நிறுத்தல் அளவையை சரிபார்க்கக்கூடிய வகையில் தெளிவாக தெரியக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும்.

பொதியிடப்பட்ட அனைத்து பொருட்களின் மேலுறைகளிலும் உற்பத்தியாளர்களின் பெயர், நிறை, அளவு, உற்பத்தி திகதி மற்றும் காலாவதியான திகதி என்பன காணப்படவேண்டும்.

தேவைக்கதிமாக பொருட்களை கொள்வனவு செய்து நீண்டகாலம் வர்த்தக நிலையத்தில் தேக்கி வைத்திருத்தலை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். அங்கிகாரமில்லாத நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.

வர்த்தக நிலையங்கள், உணவுச்சாலைகளில் பாவனையாளர்கள் பார்க்கக்கூடியவாறு விலைப்பட்டியல் தெளிவாக காட்சிப்படுத்தப்படல் வேண்டும். மருந்து விற்பனை நிலையங்களில் தங்களிடமிருந்து சகல மருந்துகளின் பொருட்களின் விலை விபரங்கள் கோவையிடப்பட்டு மக்கள் பார்வைக்க வைக்கப்படல் வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்படாத மருந்து வகைகள் மற்றும் அழகு சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை (போதையூட்டக்கூடிய பொருட்கள்) விற்பனை செய்தல் நிறுத்தப்படல் வேண்டும்.

சிகரெட், மதுபானம் போன்றவற்றை 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்பனை முற்றாக நிறுத்த வேண்டும்.

அரசாங்கத்தால் வர்த்தமானியில் அறிவித்த கட்டுப்பாட்டு விலைகளுக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்வதை வர்த்தகர் தவிர்க்க வேண்டும்.

பொதியிடப்பட்ட பொருட்களின் லேபிள்களில் ஒருபோதும் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடாது.

உற்பத்தியாளரால் உறுதிப்படுத்திய பொருட்களின் உத்தரவாதத்தை வர்த்தகர்கள் பாவனையாளர்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.

பொருட்களின் விற்பனையில் போது பாவனையாளர்களுக்கு திகதி மற்றும் விலை விபரங்களுடன் பற்றுச்சீட்டு வழங்குதல் வேண்டும்.

உற்பத்தியாளரால் அல்லது விநியோகஸ்தரால் வழங்கப்படும் இலவச இணைப்புக்கள் பாவனையாளர்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

பாவனையாளர்களின் மீதிப் பணத்தை வழங்கவேண்டியது வர்த்தகர்களின் பொறுப்பாகும். வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையான சில்லறைகளை வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். வங்கிகள் சில்லறைகளை வழங்க மறுத்தால் தங்கள் பகுதிக்கான பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும். தெரியப்படுத்திய கடிதத்தின் பிரதியை வணிகர் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

போன்ற நடைமுறைகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக வணிகர் கழகத் தலைவர் கூறினார்.

இந்த சட்ட நடைமுறைகள் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்களையும் அனுசரித்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மொத்த வியாபாரத்திலும் சில்லறை வியாபாரத்திரும் கடன் வழங்குவது தொடர்பில் வர்த்தகர்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

Related Posts