Ad Widget

வட மாகாண வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து அரச வைத்தியர்களும் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

யாழ். போதனா வைத்தியசாலையில் மோசடி மற்றும் நிர்வாக முரண்பாடு,வைத்தியர்கள் மீதாக அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி வட மாகாண வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து அரச வைத்தியர்களும் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்தப் போராட்டத்தில் யாழ்.போதனாவைத்தியசாலை வைத்தியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணிக்கு வைத்திய சாலை முன்பாகக் கூடிய இவர்கள் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதுடன் வைத்தியர்களுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான மிரட்டல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வைத்தியர்களுக்கு பொலிஸாரும் அரச வைத்தியர்கள் சங்க தாய் சங்கத்தினரும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

”ஊழலைத் தட்டிக் கேட்டால் கழிவு ஓயில் வீச்சா?”
”நோயாளர் பணத்தை சூறையாடும் ஊழல் நிர்வாகமே வெளியேறு”
”வைத்தியர்களை மிரட்டாத ஊழல் அற்ற நிர்வாகத்ததை உருவாக்குவோம்”
”ஊழல் பணிப்பாளர் வாணியே வெளியேறு”
என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

முற்பகல் 10.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் தமது போராட்டத்தால் நோயாளருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்காக வருந்துவதாகத் தெரிவித்தனர். அத்துடன் தமது போராட்டத்தால் நோயாளருக்கு ஏற்படும் சிரமங்களை சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.தொடர்ந்து மாலை 4 மணிவரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.

வைத்தியர்களின் போராட்டத்தால் வட மாகாண வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் எவையும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts