வடக்கில் உழைக்கும் பெண்களை இலக்குவைத்து சுரண்டலில் ஈடுபடும் நுண்நிதி நிறுவனங்களை இழுத்து மூடுமாறு வலியுறுத்தி, வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வாகன இலகு கொடுப்பனவு என்ற பெயரில் மக்களை சுரண்டி கொள்ளையிடும் நிதி நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
யுத்தத்தால் நலிவுற்றிருக்கும் வட பகுதி மக்கள் அதிலிருந்து மீண்டுவர முயற்சிக்கும் வேளையில், வடக்கின் உழைக்கும் பெண்களை குறிவைத்து நிதிசுரண்டும் நடவடிக்கைகளில் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த பெண்கள் மட்டுமன்றி அப் பெண் சார்ந்த குடும்பங்களும் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் உடன் தலையிட்டு இவ்வாறான நிதி நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, அரசாங்கம் இலகு தவணை அடிப்படையில் கடன் வசதிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டுமெனவும் வட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.