Ad Widget

வட மாகாண நீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்

வட மாகாணத்துக்கான நீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்பவற்றை குறுகிய மற்றும் நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் நடைபெறவுள்ள வட பகுதிக்கான நீர் விநியோகம் மற்றும் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ள முக்கிய கூட்டத்தை முன்னிட்டு, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் நடைபெற்ற வட மாகாணத்துக்கு பொறுப்பான நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்களுடனான விஷேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் ஹக்கீம் இதற்கான பணிப்புரையை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக, சுன்னாகம், வலிகாமம் வடக்கு போன்றவற்றிலும் அவற்றை அண்டிய கிராமங்களிலும் நிலக்கீழ் நீர் மாசடைவதால் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு பெரும் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.

சுன்னாகம் மற்றும் அண்டிய பகுதிகளில் ஏராளமான கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளது பற்றியும் குறிப்பிடப்பட்டது. குறிப்பாக ஏறத்தாழ இரண்டரைக் கிலோமீற்றர் பரப்பளவு நிலம் அதிக பாதிப்புக்குள்ளான பிரதேசமாக கருதப்படுகின்றது.

எண்ணெய் கசிவு நிலத்தடி நீருடன் கலப்பது தொடர்பில் வட மாகாண சபை கல்வி சார் நிபுணர்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளுக்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நடாத்திய ஆய்வு முடிவுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவது குறித்து தாம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் புறம்பாக மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு சரியான தரவுகளையும், முடிவுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை விரைவில் தமக்கு சமர்ப்பிபதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் இரசாயனக் கலவைகள் நீரில் கரைந்து நைட்ரேட்டின் அளவு உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீட்டு அளவை விட அதிகமாக நிலத்தடி நீரில் கலப்பதன் விளைவாக (நீலக் குழந்தை) சிண்ட்ரோம் போன்ற நோய் நிலைமைகள் ஏற்படுவது குறித்தும் அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

பிரச்சினைகளுக்கு நிலைமாறு கால தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு என்பவற்றை காண்பது இன்றியமையாதது என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இரணைமடு, தாழையடி, விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் காக்கையன்குளம், இரனைஇலுப்பகுளம் மக்கள் எதிர்நோக்கும் தண்ணீர் பிரச்சினை பற்றி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாரூக் அமைச்சர் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்தார். முல்லைத்தீவு, மாங்குளம், வெலிஓயா பிரதேச மக்கள் எதிர்நோக்கும் நீர் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

Related Posts