Ad Widget

வட மாகாண தேர்தல் கால துப்பாக்கிப் பிரயோகம்: பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியதன் மூலம் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான உத்தரவு வரும் 25 ஆம் திகதி வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

குறித்த நபர் சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களாகப் போட்டியிட்டிருந்த அங்கஜன் இராமநாதன், சர்வானந்தா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் ஒன்றின்போது துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றிருந்தது.

இந்தச் சம்பவத்தில் அப்போதைய வேட்பாளராகிய அங்கஜன் இராமநாதனின் தரப்பில் அவரது தந்தையார் இராமநாதன் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மறு தரப்பைச் சேர்ந்த வேட்பாளராகிய சர்வானந்தாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதே சம்பவத்தில் வேட்பாளராக இருந்த சர்வானந்தா மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவித்து, அதன் மூலம் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சுமத்தி, மூன்று ஆண்டுகளின் பின்னர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிசார் சர்வானந்தாவை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்த பிணை மனு மீதான கட்டளை 25.07.2016 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்து விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Related Posts