Ad Widget

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் – முதலமைச்சர்

vickneswaran-vicky-Cmவட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக நிருமாணிக்கப்பட்ட இருமாடி பாடசாலைக் கட்டடத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியளாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“வட மாகாண சபை முல்லைத்தீவு, மாங்குளத்தில் இருப்பது தான் எமது விருப்பமாகும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் மாங்குளம்தான் மத்தியாக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில் நிலத்திற்கு கீழ் பாரிய கற்கள் இருப்பதால் அங்கு நீர்ப்பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது.

மாங்குளத்தில் நீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களையும் யாழப்பாணத்திலிருந்து மாங்குளத்திற்கு கொண்டு வர முடியும். கொரிய நிபுணர்கள் மாங்குளத்தில் நீர் மற்றும் கட்டட நிர்மாணங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமது அய்வினை பூர்த்தி செய்ததும் அது பற்றிய முழுமையான அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் என்னிடம் கையளிப்பார்கள்.

அவ்வாறு தென் கொரிய நிபுணர்களினால் கையளிக்கப்படும் அறிக்கையில் மாங்குளத்தில் வட மாகாண சபையை நிர்மாணிப்பதற்குரிய சாதகமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டால் வட மாகாண சபையை மாங்குளத்திற்கு இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்வோம்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கூடுதலான இழப்புக்களை சந்தித்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு மாகாண அமைச்சர் ஒருவரை நியமிக்காவிட்டாலும் பிரதி தவிசாளர் பதவியை இந்த மாவட்டத்திற்கே வழங்கியுள்ளோம்.

வட மாகாண சபை ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி ஏ.எம்.ஜே.நீற்றாவின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவுஸ்ரேதிலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் றொபின் மூடி, யுனிசெபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மக்கூலி, மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதநாயகம், வட மாகாண சபையின் பிரதி தவிசாளர் அன்றனி ஜெயனாதன், மாகாண சபை உறுப்பினர்களான வீ.கனகசுந்தரம், கு.ரவிகரன், கமலா குணசீலநாதன், மாகாண கல்வி பணிப்பாளர் வீ.செல்வராஜா, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts