Ad Widget

வட மாகாண சபை பிரேரணை பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் – இந்தியா!

இலங்கை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச இன அழிப்பு விசாரணை சவாலுக்கு உட்படுத்துமானால் அது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக்கூடியதாக அமையும் என்றும் அந்த பாதிப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பதை அளவிடமுடியாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

வட மாகாணசபையின் தீர்மானம் இலங்கையில் வியாகூல தன்மையை ஏற்படுத்தியுள்ளதோடு இந்த பிரேரணையானது ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான அறிக்கை தாக்கலை எந்தளவில் பாதிக்கும் என்பதை இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படாதவிடத்து அது இலங்கையின் புதிய அரசாங்கத்தினது தமிழர் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் என்று இந்திய அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இனஅழிப்பு பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமானால் அதில் இந்தியா 2014ஆம் ஆண்டைப்போன்று பிரசன்னமாகாது இருக்கலாம் என கணிப்பிடப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியா சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது இலங்கை தமிழர் பகுதி நல்லிணக்கம், புனர்வாழ்வு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் இந்தியா சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்கத்திற்காக நம்பிக்கைக்குரிய உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என கூறியதோடு புலிகள் அமைப்புடனான யுத்தம் தொடர்பில் முன்வைக்கப்படும் சர்வதேச போர் குற்ற சர்வதேச விசாரணைக்கு ஆதரவு அளிக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி 15 தொடக்கம் 18 வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு ஜனாதிபதியான பின் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts