Ad Widget

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா ராஜினாமா?

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் இராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுழற்சி முறையில் வட மாகாண சபை உறுப்பினர் பதவி வகிப்பதாகக்கூறி, மேரி கமலா வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், ஒரு வருட காலத்தில் தான் வட மாகாண சபை உறுப்பினராக இருப்பதாகவும், அதற்கு பின்னர் ஒரு தினத்தில் பதவியை இராஜினாமா செய்து மற்றவருக்கு விட்டுக்கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

அவரால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேரி கமலா கருத்துக்கூறுகையில்,

சத்தியப்பிரமாணத்தின் போது, ஒரு வருடத்தில் பதவி விலகுவதாக கூறிய கடிதமொன்றை நான் எழுதிக்கொடுத்திருந்தேன்.

அந்தக் கடிதத்தில் எப்போது பதவி விலகுவேன் என திகதியிடாமல் அதற்கான இடைவெளி விடப்பட்ட நிலையில் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் கொடுத்திருந்தேன். இணக்கப்பாட்டின் அடிப்படையில் இதனை செய்திருந்தேன். அந்தக் கடிதமே தற்போது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

முல்லைத்தீவு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள். அந்த மக்களுக்காக நிறைய செய்யவேண்டும். என்னால் முடிந்தளவு செய்துள்ளேன், செய்தும் வருகின்றேன். தொடர்ந்தும் நான் உறுப்பினராக இருக்கவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இருந்தும், நாங்கள் செய்து கொண்ட இணக்கப்பாட்டை நான் மதிக்கின்றேன் என்று கூறினார்.

Related Posts